Header Ads

Header ADS

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் மூவருள் ஒருவர். காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா என்னும் ஊரிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலைச் சேர்ந்த பொய்கையில் பிறந்தவர்.

இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது. முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர். பொற்றாமரைப் பொய்கையில் அதாவது திருக்குளத்தில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார்.

ஆழ்வார்களில் சிலர் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஏதேனும் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவக் கொள்கை. இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் பெருமாளின் சங்கின் அம்சம் ஆவார்.

இவர் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்னும் ஆழ்வார்களுடன் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்க துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர். பெருமாள் இவர்கள் மூவருக்கும் ஓர் இல்லத்தின் இடைகழியில் ஒரே சமயத்தில் காட்சியளித்தார் என்பது பிரபலமான வைணவ வரலாறு.

அவ்வானந்தம் மிகுந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதி முறையே முதல், இரண்டாம், மற்றும் மூன்றாம் திருவந்தாதியாக உருவானது. இதில் முதல் திருவந்தாதி பொய்கையாருடையது. இதில் முதல் பாசுரத்திலேயே,

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
என்று இடராழி நீங்குகவே

என்று பாடிக்களிக்கிறார். வைணவப் பெரியவர் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்கமானது இயற்கையோடு கூடிய இறைவன் குறித்த நற்சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. `பூமியானது திட வஸ்துவாயிருப்பதால் அதைத் தகளியாகவும், கடலானது திரவ வஸ்துவாயிருப்பதால் அதை நெய்யாகவும், ஸூர்யன் ப்ரகாச ஸ்வரூபனாயிருப்பதால் அவனை விளக்காகவும் ரூபித்து அருளிச்செய்கிறார்.

இதுவரையில் எம்பெருமானைத் துதியாதிருந்ததனாலுண்டான வருத்தம் நீங்குவதற்காக என்றும், துதிக்கவொட்டாமல் பிரதிபந்தகமாயிருந்த பாவங்கள் தொலைவதற்காக என்றும், இப்பிரபந்தத்தைக் கற்று ஸம்ஸாரிகளும் துயர் தீர்ந்து வாழ்வதற்காக என்றும் மூன்று படியாக உரைக்கலாம்’ என்கிறார்.

பெருமாளை இது வரை வணங்கவில்லையே என்று யாரும் வருந்த வேண்டாம். இப்போது இப்பாசுரத்தை படித்து உலகத் துயரங்களில் இருந்து விடுபடலாம் எனப் பொருள்படக் கூறுகிறார்.

பிறந்த ஊர் :

காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில் அவதரித்தவர், 

நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)

கிழமை : செவ்வாய்

எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100

சிறப்பு : திருமாலின் சங்கின் அம்சம்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று !

இவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார். வைணவத்தினர் இவரை கவிஞர் தலைவன் என் போற்றுகின்றனர். இவர்  காஞ்சி நகர் திருவெக்கா பொய்கையில் அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர் பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார். திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார். கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார். அத்துடன் தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார். மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தவர். சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார். தன்னையே மறந்து பகவானை பாடி மகிழ்வார்.

ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவை செய்தும் வாழ்ந்து வந்தார். இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார். ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்து சேர்ந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு, சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார். இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார்.  பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 

பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்)

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)

பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)

1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்  திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)

2. திருப்பாற்கடல்

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)


Powered by Blogger.