Header Ads

Header ADS

வைணவ ஆச்சாரியர்கள்

புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார்கள் காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் நாதமுனிகள் என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.

சுந்தரசோழர் என்ற இரண்டாம் பராந்தகன் (956-973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ளது. இந்த ஸ்ரீநாதர் நாலாயிரப் பிரபந்தங்களை பாடமாகவே நடத்தி ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தாராம். இவர் தான் நாதமுனிகளாக இருக்கலாம் என்ற அபிப்பிராயமும் உள்ளது. ஸ்ரீரங்கம் கட்டுரை

நாதமுனிகளுக்குப்பிறகு ஆச்சாரிய பதவியில் வந்தவர்களில் சரித்திரப் பிரசித்தி பெற்றவர்கள் மூவர். இராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியர், வேதாந்த தேசிகர்.

இராமானுசரும், வேதாந்த தேசிகரும், மணவாளமாமுனிகளும் தமிழை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும் ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா வரை ஆன்மீகத்தை பரப்பியுள்ளனர். அரங்கத்துறையும் இறைவனின் அருளும், அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும், கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழ் தேனை நடைமுறைக்கு கொண்டுவந்தனர். நாதமுனிகள் காலத்திற்கு முன் ஆழ்வார்களின் அருமையான செந்திறத்த தமிழோசை குடந்தை, தஞ்சை ஆகிய சில பெரிய ஆலயங்களில் மிகக்குறைவாக ஒரு சில பதிகங்களை மட்டுமே ஓதி வந்தனர். பின்பு நாதமுனிகளால் அருந்தவயோக முறையில் நாலாயிரம் பாசுரங்களும் கிடைக்கப்பெற்று பாரத தேசத்தின் பெரும்பகுதிகளில் பரப்பட்டது.

தமிழ் பாசுரங்ளை சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், ஒரியா மொழிகளில் எழுதி வைத்து, அந்த தேசத்து வைணவப்பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தது. வேதம், ஆகம வழிபாட்டில் சமஸ்கிருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலிப்புப் பிழை ஏற்படின் தவறான பொருளாக அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக்கூட பைந்தமிழ் பாசுரங்களை இசைத்து பாடுவதால் அப்பிழையைக்கூட கடவுள் பொறுப்பதாக கூறியதால், தமிழின் மேன்மையை அறிந்த இராமானுசர் அனைத்து வைணவ ஆலயங்கள், இல்லங்களிலும் பூஜை முறைகளில் பசுந்தமிழ் பாசுரங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தார். திருவிழாக்களின் போதும், கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தி அமைத்தார். இல்லறச் சடங்குகளிலும் ஆழ்வார்களின் பாசுரங்களை வேதத்துக்கு இணையாக வைணவர்கள் ஓதிவரும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

Powered by Blogger.