முதலாழ்வார்கள்
முதலாழ்வார்கள்
மொத்தம் பன்னிரெண்டு ஆழ்வார்கள். அதில் முதாலாழ்வார்கள் மூவர். சித்தாதிரி ஆண்டு ஐப்பசி மாதத்தில், அடுத்தடுத்த நட்சத்திரத்தில் இவர்கள் பிறந்தது ஒரு அதிசயதக்க உண்மை!
பொய்கையாழ்வார் திருமாலின் திருக்கரத்தில் உள்ள சங்கின் அம்சமாக ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், காஞ்சிபுரத்தில் திருவெஃகாவை அடுத்த ஒரு பொய்கையில் பொற்றாமரை மலரில் அவதரித்தார். அவர் பொய்கையில் பிறந்ததால் அவருக்கு அந்தப் பெயர்.
மறு நாள் அவிட்ட நட்சத்திரத்தில் திருமாலின் கதாயுதத்தின் அம்சமாக மாமல்லபுரத்தில் நீலோற்பல மலரில் (குருக்கத்தி மலரில்) பூதத்தாழ்வார் அவதரித்தார். பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருள், சத்தைப் பெற்றது என்பது. (சத்து = அறிவு) திருமாலின் திருக்குணங்களை அநுபவித்தே அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார்.
அதற்கும் அடுத்த நாள் சதய நட்சத்திரத்தில் பெருமாளின் வாளின் அம்சமாய் மயிலாப்பூரில் உள்ள கிணற்றில் செவ்ல்லி மலரில் பேயாழ்வார் அவதரித்தார். இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் சராசரி மனிதனை விட வேறு படுத்திக் காட்டியது. தம்மை மறந்த நிலையில், பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்து, சிரித்து, தொழுது, குதித்து ஆடினார், பாடினார். இதனால் இவரைப் பேயாழ்வார் என்று யாவரும் கூப்பிட்டனர்.
இவர்களிடையே என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்! நீர் நிலையில், மலர்களின் மீது, ஒரு தாய் வயிற்றில் பிறக்காமல் இம்மூவரும் அவதரித்து உள்ளனர். தெய்வத்தின் அம்சமாகப் பிறந்ததினால் இயற்கையிலேயே ராஜச குணம், தாமச குணம் இல்லாமல் சத்வ குணத்தில் திளைத்திருந்தனர். பெருமாளின் அருளாலே மயர்வற மதிநலமும் அருளப் பெற்றிருந்தனர். இறைவன் மேல் அதிக பக்தியுடன், வைராக்கியத்துடன், போக வாழ்க்கையைத் துறந்து, மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் இன்னொரு நாள் இருக்காமல் வாழ்ந்து வந்தனர். ஒருவரை ஒருவர் அறியவில்லை. இவர்கள் மூவரும் சந்திக்காமலே வாழ்ந்து வந்தாலும் இறைவன் மேல் திவ்யப்பிபந்தங்களை இயற்ற வேண்டிய தருணம் வந்ததும் மூவரும் திருக்கோவலூரில் சந்தித்துக் கொள்கின்றனர். எல்லாமே அவன் செயல் தானே!