ஸ்ரீவைஷ்ணவம்
விசிஷ்டாத்வைதத்தில் ஸ்ரீ என்ற அன்னை தத்துவம் மையத்திலுள்ளது. இதனால் தான் இந்த சமயப் பிரிவுக்கே ஸ்ரீவைஷ்ணவம் என்ற பெயர். அன்னை தத்துவத்தை "தாயார்" என்று வைணவர்கள் அன்பொழுக அழைப்பர். இராமானுஜருடைய எல்லா நூல்களிலும் (முழுவதும் வேதாந்தம் பேசும் ஸ்ரீபாஷ்யத்தைத் தவிர) ஸ்ரீ என்ற மகாலட்சுமி, திருமாலின் மார்பில் அவருடன் என்றும் இருப்பதாகவே பேசப்படும். யாண்டும் கூட இருப்பவள் என்று பொருள்படும் அனபாயினி என்ற வடமொழிச் சொல்லை அடிக்கடி காணலாம். இராமானுஜருக்குப் பின் வந்தவர்கள் அன்னை ஸ்ரீயின் அருள் இல்லாமல் கடவுளிடம் நம் வேண்டுதல் செல்லாது என்பர். அதனாலாயே இன்றும் வைணவத் திருக்கோயில்களில் ஆசாரியனை தொழுத பின் தாயார் ஆகிய திருமகளை தொழுது பின் கோயில் மூலவரை தொழும் வழக்கமுள்ளது.