Header Ads

Header ADS

திவ்ய தேசங்கள் - திருப்பதிகள்

திருமால் உறையும் தலங்கள் திருப்பதிகள் எனப்படும். ‘பதி’ என்ற சொல், தமிழ் இலக்கியங்களில் ‘மக்கள் வசிக்கும் பகுதி’ எனப் பொருள் கொள்ளும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. திருமால் அந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிகொண்டு அருளாட்சி செய்வதால், அது திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. தொண்டை, நடு, பாண்டிய, சேர, சோழ, வட நாட்டுத் திருப்பதிகள் எனவும், மன்னர்கள் அரசாட்சி எல்லையில் அமைந்த தலங்கள் எனவும் நாட்டு எல்லையை வறையரையாகக் கொண்டு பதிகள் பெயரிட்டு வழங்கப்பட்டன.

பின்னர் வட வேங்கடம் என்னும் திருமலையையே, திருப்பதி எனக்கொண்டு அழைத்து வந்தனர். அது தவிர்ந்து அதற்குத் தென்புறமாக உள்ள பகுதிகளில் இருக்கும் சீனிவாசர், பிரசன்ன வேங்கடேசர் போன்ற பெயர்களில் வழங்கும் திருக்கோவில்கள் எல்லாம், மக்களின் அபிமான மிகுதியால் ‘தென் திருப்பதி’ எனவும், சீனிவாசப் பெருமாள் மூலவராக எங்கெங்கு காட்சி தருகின்றாரோ அவை மட்டும் ‘தென் திருப்பதி’ எனவும் வழங்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

நவம் என்பதற்கு ‘புதியது’, ‘ஒன்பது’ என்பது பொருளாகும். இடத்திற்குத் தகுந்தபடி பொருள் கொள்ள வேண்டுமாதலால் நவ திருப்பதி என்பதை, திருமால் உறையும் ஒன்பது தலங்கள் எனப் பொருள் கொள்வதே சரியானதாக இருக்கும்.

இந்த நவ திருப்பதி திருத்தலங்களும், 108 திவ்ய தேசங்களுள் அடங்கும் ஆலயங்களாகும். திருத்துலைவில்லிமங்கலத்தில் இருக்கும் இரு திருப்பதிகளும், திவ்யதேச வரிசையில் ஒரே திவ்யதேசமாக புராண வரலாற்று அடிப்படையில் கருதப்படுகின்றன.

நவ திருப்பதிகளுடன் சேர்த்து 108 திவ்ய தேசங் களின் வரலாறுகளை, கீழ்கண்ட இலக்கியம் மற்றும் வரலாற்று நூல்கள் அவற்றின் பக்தி, வரலாற்றுடன் இணைந்த இலக்கியச் சுவை சேர்த்து நமக்கு எடுத்துரைக்கின்றன.

திருவரங்கத்தம்மனாரின் நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை,
வங்கிபுரத்தாய்ச்சியின் 108 திருப்பதிக் கோவை, பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, குரவை ராமானுஜதாசரின் நூற்றெட்டுத் திருப்பதித் திருப்புகழ், திருநின்றலூர் திருமலை தத்தங்கியார் தொண்டன் இயற்றிய 108 திருப்பதி அந்தாதி, நூற்றெட்டு திருப்பதி வெண்பா, முத்துசாமி ஐயங்காரின் 108 திருப்பதி அகவல், ந.சுப்பராயப்பிள்ளையின் 108 திருப்பதிக்கோவை, ரா.ராகவையங்காரின் 108 திருப்பதிப் பாடல்கள், சண்முக முதலியாரின் 108 திருப்பதிப் போற்றி அகவல், உபயகவி அப்பாவின் 108 திருப்பதித் தாலாட்டு, 108 திருப்பதி வண்ண விருத்தம் (உ.வே.சா. நூலகம்), விஷ்ணு ஸ்தல மஞ்சரி போன்றவை திவ்ய தேசங்களைப் பற்றிய தகவல்களைத் தரும் சில நூல்களாகும்.

வைணவ உலகில் போற்றி புகழப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தம், நாதமுனிகளுக்குக் கிடைத்தது நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் என்பது குறிப்பிடத்தக்கது. 12 ஆழ்வார்களில் நம்மாழ்வாரும், மதுரகவி ஆழ்வாரும் நவ திருப்பதிகளில் முறையே ஆழ்வார் திருநகரி மற்றும் திருக்கோளூரில் அவதரித்தவர்கள். 

இந்த நவ திருப்பதி தலங்கள் ஒன்பதும், 30 கிலோமீட்டர் சுற்றளவிற்குள், அழகாகத் தொடுக்கப்பட்ட மாலையைப் போல் தாமிரபரணி கரையிலேயே அமைந்துள்ளன. தாமிரபரணி நதியின் வட கரையில் 6 தலங்களும், தென் கரையில் தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய மூன்று திருத்தலங்களும் அமைந்து அணி செய்கின்றன. நவ திருப்பதியின் அனைத்து பெருமாள் தலங்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தரிசனம் செய்வது சிறப்பானது. 

என்றாலும் ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை ஆகிய 3 தலங்களில் மட்டுமே சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது. ஆழ்வார் திருநகரியில் நள்ளிரவு 12 மணிக்கும், ஸ்ரீவைகுண்டத்தில் இரவு 7 மணிக்கும், தென்திருப்பேரையில் வைகுண்ட துவாதசி அன்று மாலை 4 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது, அதே போல் இந்த 3 திருக்கோவில்களிலும் பாஞ்சராத்திர ஆகமமும், மற்ற ஆறு தலங்களிலும் வைகானச ஆகமமும் பின்பற்றப்படுகிறது.

திருப்புளிங்குடி மற்றும் திருக்கோளூர் ஆகிய தலங்களில் கிடந்த திருக்கோலத்திலும், வரகுணமங்கை, தென் திருப்பேரை மற்றும் இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசனப் பெருமாள் ஆகிய திருத்தலங்களில் அமர்ந்த கோலத்திலும், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, பெருங்குளம் மற்றும் இரட்டை திருப்பதி தேவர்பிரான் ஆலயம் ஆகிய தலங்களில் நின்ற கோலத்திலும் பெருமாள் சேவை சாதிக்கிறார். இதனை நம்மாழ்வார் ‘புளிங்குடிக் கிடந்து, வரகுணமங்கையில் இருந்து, வைகுந்தத்துள் நின்று’ என்று மங்களாசாசனம் செய்கிறார்.

பெருமாள் நடந்தால் குடையாகவும், இருந்தால் ஆசனமாகவும், கிடந்தால் அணையாகவும் இருப்பதாக ஆதிசேஷனை குறிப்பிடுவது வழக்கம். நவதிருப்பதியில் இருக்கும் பெருமாள்களின் திருக்கோலங்கள் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆதிசேஷனுடன் தொடர்புள்ள சன்னிதிகளாக அமைந்துள்ளன. அதேபோல் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில் கருடாழ்வாருக்கு முக்கியத்துவம் உள்ள வரலாறு உண்டு. பட்சிராஜன் வழிபாடு என்ற முறையில் அவருக்கு கடப்பன், தங்க போத்தி, காய்சின வேந்தன் போன்ற பெயர்கள் உள்ளன. தென் திருப்பேரையில் சன்னிதிக்கு நேராக இருக்கும் கருடாழ்வாரை, பெருமாள் ஒதுங்கி இருக்கச் சொன்ன வரலாறும் உண்டு. வைகாசி விசாகத்தில் நவ திருப்பதி பெருமாள்களும் கருட வாகனத்தில் வந்து சேவை சாதிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

Powered by Blogger.